அட்டைப்படத்தை பார்த்துவிட்டு .. விஜய் குறித்து கார்த்தி சிதம்பரம் சொன்ன வார்த்தை!
கட்சி அறிவிப்பது பெரிய விஷயமல்ல. நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்
சென்னை பனையூரில் இருக்கும் தனது கட்சியின் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை, நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கொடிப் பாடல் பின்னணியில் ஒலிக்க, கட்சி அலுவலகத்தில் உள்ள 40 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் தனது கட்சிக் கொடியை ஏற்றினார்.
மேலும் கட்சியின் கொள்ளைகள் என்ன, கட்சியின் வருங்கால செயல்பாடுகள் ,கொடி அமைப்பின் காரணம் குறித்து முதல் மாநில மாநாட்டில் சொல்லப்போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சி அறிவிப்பது பெரிய விஷயமல்ல. நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம்
புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சிகாக வருகை தந்த கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,'' கட்சிக்கொடி, கலர் , லெட்டர் பேடு இதையெல்லாம் வைத்து மக்கள் முடிவு செய்ய மாட்டார்கள்.
அவரின் நிலைப்பாட்டை வைத்துதான் இவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று ஒரு முடிவுக்கு வர முடியும்.கட்சி அறிவிப்பது பெரிய விஷயமல்ல. நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ,''ஒரு புத்தகத்தை உள்ளே படித்துவிட்டுத்தான் அது எப்படி என்று சொல்ல முடியும்.
அட்டைப்படத்தை பார்த்துவிட்டு கலர் நன்றாக இருக்கிறது என்று என்னாலும் சொல்ல முடியாது. தனியாக கட்சி நடத்துகிற சிரமம் பட்டால்தான் தெரியும். சகோதரர் விஜய்யும் பட்டு தெரிந்துகொள்வார் என்று கூறினார்.