பல போராட்டங்களுக்கு பிறகு கர்நாடக அணையில் 5000 கன அடி நீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி!
கர்நாடக அணையிலிருந்து காவிரி நீர் திறந்துவிடப்பட்டதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தண்ணீர் தர மறுப்பு
இந்தாண்டு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணை தண்ணீரை நம்பி குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்தனர். அண்டை மாநிலமான கர்நாடகாவில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்த நிலையிலும் தமிழகத்திற்கு நீர் தர மறுத்தனர்.
இதனால் மேட்டூர் அணையின் நீர் 150 அடியாக சரிந்தது. தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நீரைக் கர்நாடகா உடனடியாக தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனும் டெல்லி சென்று திரும்பியிருந்தார். தற்பொழுது காவிரி ஆற்றில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் திறப்பு
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 7914 கன அடி நீரும், கபினி அணையில் 7886 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. இதில் கபினி அணையின் முழு கொள்ளளவு 84 அடி அடியாகும். இதில் இப்போது 74.33 அடிக்கு நீர் இருக்கும் நிலையில், இதன் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இப்போது சுமார் 72 அடி நீர் இருக்கிறது. கடந்தாண்டு இதே நேரத்தில் அணையின் முழு கொள்ளளவும் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தியும் கர்நாடக நீரைத் தர மறுத்து வந்தது. தற்பொழுது கர்நாடகாவில் உள்ள அணைகள் திறப்பினால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.