காவிரி விவகாரம் - அடம்பிடிக்கும் கர்நாடகா...போட்டி தீர்மானம் கொண்டு வர முடிவு!!
தமிழக சட்டமன்றத்தில் காவிரி விவகாரத்தில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து கர்நாடக சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரப்படும் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர கர்நாடக அரசு மறுப்பதால், டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மாதங்களாக பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு பல முன்னெடுப்புகளை நீரை பெற்றுத் தருவதில் எடுத்து வருகின்றது.
அந்தவகையில் நேற்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். விவாதத்திற்கு பிறகு, காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
போட்டி தீர்மானம்
இந்நிலையில், தமிழகத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதே போல கர்நாடக சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவரப்படும் என அம்மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. எங்களது விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என கூறி தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.