இந்த சிறை பிரியாணிக்கு இவ்வளவு மவுசா..5 ஆண்டில் ரூ.8.5 கோடி வருவாய்!
“புட் பார் பிரீடம்" என்ற திட்டம் வழியே சிறைக் கைதிகள் தயாரித்த உணவுகள் விற்கப்படுகிறது.
சிறை பிரியாணி
கடந்த 2010-ம் ஆண்டு கேரள சிறைகளில், “புட் பார் பிரீடம்" என்ற திட்டம் துவங்கப்பட்டது. அதன் மூலம், சிறைகளில் ருசியான, கமகமக்கும் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், சிறைக் கைதிகள் தயாரித்த உணவு வகைகள் வணிக ரீதியாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
அதில், திருவனந்தபுரம், திருச்சூர், கண்ணூர், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் சிறைகளில் 21 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில் கண்ணூர் சிறைக் கைதிகள் தயாரிக்கும் சிக்கன் பிரியாணி அப்பகுதி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து கண்ணூர் சிறை அதிகாரிகள் கூறுகையில், “புட் பார் பிரீடம்" திட்டம்கண்ணூர் சிறையில் கடந்த 2012-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது.
இவ்வளவு மவுசா..
சிறைக் கைதிகள் நாள்தோறும் பல்வேறு வகையான உணவு வகைகளை தயார் செய்து வருகின்றனர். இதில் சிக்கன் பிரியாணி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுஉள்ளது. நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறோம்.
இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.8.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது. “புட் பார் பிரீடம்" திட்டத்தால் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. அதோடு சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற கைதிகள், சிறையில் இருந்து விடுதலையான பிறகுசொந்தமாக ஓட்டல் நடத்த முடியும். என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உணவு தானியங்கள், இறைச்சி போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக,
கேரள சிறைக் கைதிகள் தயாரிக்கும் உணவு வகைகளின் விலை கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகும் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.