கணவரிடம் நெருங்க கூடாது; எச்சில் தட்டில் சாப்பிடனும் - புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமியார் கொடுமை
கன்னியாகுமரி, சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்துள்ளது.
இந்நிலையில், கணவருடன் வசித்துவந்த ஸ்ருதி, திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். தொடர்ந்து இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலைக்கு முன்பு, வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை ஸ்ருதி அவரது அம்மாவிற்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
அதில், "அம்மா, என்னை என்னுடைய மாமியார், அம்மா வீட்டில் விட்டுவிட வேண்டும் என அடிக்கடி சொல்றாங்க. அப்படி வாழாவெட்டியாக உங்கள் வீட்டில் வந்து உட்கார எனக்கு விருப்பமில்லை. அதைவிட இங்கு இருப்பது எவ்வளவோ மேல். அவருக்கும் (கணவர்) எனக்கும் இந்த நாள் வரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை.
புதுமணப்பெண் தற்கொலை
எல்லா பிரச்சனையும் இவங்களால்தான் (மாமியார்) வருது. கணவருடன் நான் வெளியே செல்லக்கூடாதுன்னு சொல்றாங்க. கணவர் சாப்பிட்டப்புறம்தான் நான் சாப்பிடணுமாம். என் கணவர் பக்கத்தில் நான் உட்கார கூடாது. அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது. எச்சில்தட்டு எடுத்து சாப்பிடணும். இப்படியெல்லாம் என்னை கொடுமைப்படுத்தறாங்க.
என்னுடைய நகையெல்லாம் 2 டப்பாவில் போட்டு வெச்சிருக்கேன். அந்த டப்பாவை எனது கணவரிடம் கேளுங்கள். அவர் எடுத்து உங்களுக்கு தந்திடுவார். அதை தயவு செய்து வாங்கிக்குங்க. தமிழ்நாட்டு கலாச்சாரப்படி என்னடைய இறுதி சடங்கை நிறைவேற்றுவதாக சொல்லி யாராவது வந்தால், அது தேவையே இல்லை. அப்படி பண்ண விடாதீங்க.
இவங்க கலாச்சாரத்தில் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம்.
என் உடலை கோயம்புத்தூருக்கு கொண்டு போயிருங்க. இல்லைன்னா இங்கேயே இறுதி சடங்கு பண்ணுங்க. மின்தகன மேடையில் வைத்து சுவிட்ச் ஆன் செய்துவிட்டால் போதும். இவர்கள் கட்டுப்பாட்டுப்படி ஒன்றும் செய்துவிட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.