நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை - உச்சநீதிமன்ற தீர்ப்பு
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆணவக் கொலை வழக்கு
கடலூர் குப்பநத்தம் புது காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சார்ந்தவர் முருகேசன். இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இடைநிலை சாதியைச் சேர்ந்த கண்ணகி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் 2003ல் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து வீட்டில் தங்களது திருமணத்தை மறைத்து வசித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல், பெண் வீட்டாருக்கு இது தெரியவந்துள்ளது.
உடனே, முருகேசன் கண்ணகியை விழுப்புரம், மூங்கில் துறை பட்டியில் தனது உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனையடுத்து மகளை காணவில்லை என தேடி வந்துள்ளனர். மகள் கிடைக்காத நிலையில், முருகேசனை கடத்தி, கண்ணகி இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரையும் பிடித்து வந்துள்ளனர்.
பின் இருவருக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்து சடலங்களை அருகிலுள்ள சுடுகாட்டில் தனித்தனியாக எரித்துள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், சிபிஐ விசாரணை நடைபெற்று வந்தது. 2021ல் தீர்ப்பு வழங்கிய கடலூர் சிறப்பு நீதிமன்றம் கொலை செய்யப்பட்ட கண்ணகியின் தந்தை துரைசாமி அவரது சகோதரர் மருதுபாண்டி, ஐயா சாமி, ரங்கசாமி , கந்தவேலு, ஜோதி வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புளி ராமதாஸ், சின்னதுரை உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவித்தது.
ஆயுள் தண்டனை உறுதி
இதில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிராக குற்றவாளிகள் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் அம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததுடன்
கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 10 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ரங்கசாமி, சின்னதுரை இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக கே.பி.தமிழ்மாறன், ஜி.வெங்கடேசன், ஜி.கந்தவேல், ஆர்.தனவேல், கே.ராமதாஸ், சி.துரைசாமி, டி.மருபாண்டியன் மற்றும் எம்.செல்லமுத்து ஆகிய எட்டு பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.