நம்பி வந்த காதலி; உருத்தெரியாமல் எரித்த காதலன் - நடுக்காட்டில் பயங்கரம்
எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வற்புறுத்திய காதலி
திண்டுக்கல், ஆத்தூர் அருகே கன்னிவாடி பகுதியில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் அடையாளமே காண முடியாத அளவுக்கு இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த சிலர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
உடனே விரைந்த போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண் தாய், தந்தை இல்லாமல் மதுரையில் ஆசிரமத்தில் பயின்று வந்துள்ளார்.
12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் நிலையில் மதுரையில் வேலை செய்து வந்த அப்பெண்ணுக்கு திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள எமக்கல்லாபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் லிவிங் டூகெதரில் கடந்த ஒரு வருடமாக இருந்து வந்துள்ளனர்.
காதலன் வெறிச்செயல்
அதில் இரண்டு முறை அந்த பெண் கர்ப்பமாகி கரு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, அந்தப் பெண் பிரவீனிடம் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி வந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரவீன் அந்த பெண்ணை அமைதி சோலை பகுதிக்கு அழைத்துச் சென்ற நிலையில்,
அங்கு ஏற்பட்ட தகராறில் பெண்ணை வண்டியில் இருந்து தள்ளி விட்டதாகவும், இதில் தலையில் காயமடைந்த அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின் பிரவீன் அடையாளம் தெரியாத அளவுக்கு இளம் பெண்ணின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதன் அடிப்படையில் பிரவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.