ஆளுநர் கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளக் கூடாது - கனிமொழி பேச்சு
ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும். கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளக்கூடாது என கனிமொழி பேசியுள்ளார்.
கனிமொழி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் மினி எம்பிஏ படிப்பில் பட்டம் பெற்ற 10 திருநங்கைகள் உட்பட 18 பேருக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
இதன் பின் விழா மேடையில் பேசிய அவர், "ஒரு காலத்தில் திருநங்கைகள் பாஸ்போர்ட் வாங்க முடியாது. கல்லூரியில் சேர முடியாது. இந்த சமூகம் அவர்கள் மீது காட்டிய வேறு விதமான பார்வை தான் அதிகளவில் திருநங்கைகளை ஆபரேஷன் செய்ய வைத்தது. திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்த தலைவர் கலைஞர். பெரியார் வழியில் வந்த இந்த ஆட்சி இன்று வரை அதை செய்து கொண்டிருக்கிறது" என பேசினார்.
ஆளுநர்
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கடந்த 2008 ஆம் ஆண்டு, முதன்முதலாக தலைவர் கலைஞர்தான் திருநங்கைகளின் எதிர்காலத்திற்காக ஒரு அங்கீகாரத்தை கொடுத்தார். இந்த நாட்டிலேயே திருநங்கைகளை முதன்முதலாக அங்கீகரித்த மாநிலம் தமிழ்நாடு.
ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் இப்படிதான் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள். பாஜக தமிழகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதிமுக பிரச்னையை அவர்கள்தான் சரி செய்து கொள்ள முடியும். திமுக அதற்கு அறிவுரை வழங்க முடியாது" என பேசினார்.