எங்கள் கல்வி கொள்கையில் தலையிட மத்திய அரசு யார்? நாடாளுமன்றத்தில் சீறிய கனிமொழி
மாநில கல்வி கொள்கையில் மத்திய அரசு தலையிடுவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பட்ஜெட் விவாதம்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி பேசினார்.
இதில் பேசிய அவர், ஒன்றிய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை. மாநில அரசுகள் தான் கல்விக்காக அதிக நிதி ஒதுக்குகின்றன. ரயில் நிலையங்கள் உள்பட பல இடங்களில் இந்தி திணிப்பு நடந்து வருகிறது. ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு கூட வாங்க முடியவில்லை, அந்த அளவுக்கு மொழியை திணித்து வருகிறீர்கள்.
கல்வி
கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. ஆனால் மத்திய அரசானது, கல்வி என்பது மத்திய அரசுக்கு மட்டுமே உரிய ஒன்றாக கருதுகிறது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசுதான் 60% தர வேண்டும். 40% தான் மாநிலங்கள் தர வேண்டும். தமிழ்நாட்டில் கல்விக்காக 12 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு வெறும் 2.5 சதவீதத்தை மட்டுமே ஒதுக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 15 பள்ளிகளில் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் கற்க வேண்டும் எனில், 20 மாணவர்கள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியரிடம் தமிழ் கற்க விருப்பம் உள்ளது என கோரிக்கை வைக்க வேண்டும். அதன் பின்னர் தமிழுக்கான ஆசியர்கள் கிடைத்தால் அவர்கள் நியமிக்கப்பட்டு தமிழ் கற்பிக்கப்படும். இந்த பள்ளிகளில் நாங்கள் கோரிக்கை வைத்து கெஞ்சி போராடி தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். இது தான் மத்திய அரசு கடைபிடிக்கும் மொழிக்கொள்கைக்கு உதாரணம்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை மாலை உணவு வழங்கி வருகிறோம். இந்த காலை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. இதே போல் மத்திய அரசு சார்பில் பிஎம் போஷா என்னும் குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதியை கூட வழங்குவதில்லை என பேசினார்.
மொழி போராட்டம்
மேலும், பிரதமர் ஸ்ரீ திட்டம் என்ற பெயரில் புதிய கல்வி கொள்கையை திணிக்கிறது. இந்த திட்டத்தில் தமிழக அரசு சேர மறுத்ததால் எங்களுக்கு தர வேண்டிய 500 கோடியை மத்திய அரசு தர மறுக்கிறது. எங்கள் கல்விக்கொள்கையில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
இதே பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். தற்போது பிரதமராகிவிட்ட பின்னர் மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடியவராக மாறி இருக்கிறார். எங்களுடைய கல்விக் கொள்கையில், மக்கள் நம்பிக்கையில், எங்கள் மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தின் கொள்கைகளில் மத்திய அரசு தலையிடுவதற்கு யார்? என கேட்கிறோம் என பேசியுள்ளார்.
மேலும், மொழிக் கொள்கையை வைத்து திமுக அரசியல் செய்கிறது என இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டனர். உலகில் வேறு எங்காவது மொழிப் போராட்டத்திற்காக உயிரையே தியாகம் செய்த நூற்றுக்கணக்கானவர்கள் எங்கே இருக்கிறார்கள் என காட்ட முடியுமா? உங்களுக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் கூட நீங்கள் பங்கேற்றவில்லை என பேசியுள்ளார்.