பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வர தைரியம் உள்ளதா? கனிமொழி கேள்வி
பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வர தைரியம் உள்ளதா என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
கனிமொழி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தில் வாகை மக்கள் இயக்கம் சார்பில் பெருந்தமிழர் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
நிகழ்வில் பேசிய அவர், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் தமிழ் அறிவை உணர்ந்து கொண்டு பாவணருக்கு மரியாதை அளித்த தலைவர் கலைஞர். நாம் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை, அனைவரும் சாதியே இல்லை என்கிறது திராவிட இயக்கம்.
பாஜக ஆட்சி
ஆனால் ஜாதி மத பேதங்களை அடையாளம் கண்டு ஆனால், ஒவ்வொரு ஜாதிக்கும், ஜாதிகளின் பெருமைகளை கூறி பிரிவினையை உண்டாக்கி பிளவு படுத்தும் இயக்கம்தான் பாரதிய ஜனதா கட்சி என்றும் கூறினார்.
அனைத்து ஜாதிகளும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கொண்டுவர தயாரா என கேள்வி எழுப்பிய கனிமொழி, கடவுள் நம்பிக்கை இருக்கும் இந்துக்களை கோவில் கருவறைக்கு அனுமதிக்க நீங்கள் தயாரா? அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலை உங்களிடம் உள்ளதா எனவும் பாஜக ஆட்சியை குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிவாரண நிதியை தராமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய கருத்தியல்களை நம் மீது திணித்துக் கொண்டு நம்மை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவர்கள். அவர்களை அடையாளம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.