இந்து கோவிலை நிர்வகிக்க இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா? கனிமொழி ஆவேசம்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக திமுக எம்பி கனிமொழி பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வக்பு வாரியம்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை இன்று மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார்.
மசூதிகள், மத்ரஸாக்கள், தர்காக்களின் நிர்வாக முறைகளைக் கண்காணிக்கும், மற்றும் அதன் கீழ் வரும் வக்பு சொத்துகளைக் கண்காணிக்கும் அமைப்பு வக்பு வாரியம். இதற்காக 1954-ல் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு, 1958 ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன.
சட்ட திருத்தம்
இது தொடர்பான விரிவான சட்டம் 1995 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 2013 ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திருத்தம் கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டத்தில் 40 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய திருத்ததில் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரதிநிதித்துவதத்தை உறுதி செய்தல் உட்பட பல திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தங்கள் வக்பு வாரியத்தின் தன்னிச்சையான அதிகாரத்தை குறைப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கனிமொழி
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, வக்பு வாரிய சட்டதிருத்தம் மனித இனத்துக்கே எதிரானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. மத சுதந்திரம், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
மேலும், அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல. எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்? இந்து கோவில்களை நிர்வகிக்கும் இந்து அறநிலையத்துறை போன்ற அமைப்புகளில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அனுமதிப்பீர்களா என பேசியுள்ளார்.