ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை கூட கொடுக்க முடியாத நிலை.. கனிமொழி அதிர்ச்சி தகவல்!
பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழி
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தகுதி வாய்ந்த மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் 15 ம் தேதி மகளிர் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி கோவில்பட்டியில் திமுக மகளிரணி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், கனிமொழி எம்.பி கலந்துகொண்டு பேசினார்.
மகளிர் உரிமைத் தொகை
அப்போது, ”மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு வழங்கக்கூடிய ஜிஎஸ்டி வரி பாக்கி 20,000 கோடி உள்ளது. பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படும்.
மகளிர் உரிமைத்தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று நம்முடைய முதலமைச்சரே சொல்லக்கூடிய அளவிற்குத் தொடர்ந்து தமிழகத்திற்குப் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். வெள்ள பாதிப்புக்கு நிதி கேட்டாலும் பணம் தருவதில்லை.
வரவேண்டிய வரி நிலுவைத் தொகையும் தருவதில்லை. தமிழக அரசின் எந்தத் திட்டத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நிதி கொடுப்பதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.