மக்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்வது நல்லது - கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு!
இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டதால், மக்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்வது நல்லதுதான் என கங்கான ரனாவத் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கங்கான ரனாவத்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வந்த கங்கான ரனாவத் 2024 மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கினார் . அதைத் தொடர்ந்து, 73,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத்தேர்வானார்.
இதற்கிடையில், பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்ததற்காக, சத்தீஸ்கர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரால் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரம் மூலம், அரசியலில் மீண்டும் பேசுபொருளானார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில், விவசாயிகள் போராட்டத்தை வங்கதேசப் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இவரது பேச்சுக்குச் சொந்தக் கட்சியான பாஜகவே கடும் கண்டனம் தெரிவித்து, மீண்டும் இது போன்ற பேச்சுகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது . இந்த நிலையில் தற்பொழுது பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மீண்டும் சர்ச்சை
கடந்த சில தினங்களுக்கு முன் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கங்கான ரனாவத், "இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டதால், மக்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்வது நல்லதுதான்"என்று கூறியிருந்தார்.
இதற்குச் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் மோடி ஆட்சியில் இங்கு இருப்பதை விட வெளிநாடு செல்வதே சிறந்தது என கங்கான கூற வருகிறாரா கேள்வி எழுப்பி வருகின்றனர்.தற்பொழுது இந்த விவகாரம் பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .