மாப் குச்சி குளுக்கோஸ் ஸ்டாண்டா..? கொந்தளித்த டிடிவி தினகரன்..!
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தரையை துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியை குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாக செய்திகளை வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகின்றது.
டிடிவி கண்டனம்
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தரையை துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியை (Mop Stick) குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட அம்மருத்துவமனையில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவலநிலை
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தரையை துடைக்க உதவும் மாப் குச்சியை (Mop Stick) குளுக்கோஸ் ஸ்டாண்டாக பயன்படுத்தும் புகைப்படம் சுகாதாரத்துறையின் அவலநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என எழுந்த அடுக்கடுக்கான புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே மருத்துவமனைகளில் நடைபெறும் தொடர் சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
எனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தேவையான அடிப்படை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.