5-வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
காஞ்சிபுரம் அருகே பெண் பயிற்சி மருத்துவர் 5-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டை பகுதியில் பிரபல மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பயிற்சி மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஷெர்லின் (23) என்ற ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஞாயிறுகிழமை இரவு மருத்துவமனையின் 5-ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது . உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொன்னேரிக்கரை காவல்துறையினர் மாணவி ஷெர்லின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது .
தற்கொலை
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொன்னேரிக்கரை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மாணவி ஷெர்லின் ஏற்கெனவே தனிப்பட்ட சொந்த விவகாரத்தில் மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்துள்ளார். அதற்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் . இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.