பெரியார் சிலை உடைக்கப்படும் நாளே இந்து எழுச்சி நாள் - தலைமறைவான கனல் கண்ணன்!
சினிமா சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பெரியார் குறித்து பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
பிரச்சாரப் பயணம்
இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாத காலமாக, ‘இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயணம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தது. பிரச்சார பயணம் நிறைவடைந்ததையொட்டி, சென்னை மதுரவாயலில் பிரச்சாரப் பயணம் நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவர், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
கனல் கண்ணன்
கனல் கண்ணன் பேசிய வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கனல் கண்ணன் அந்த வீடியோவில் பேயிருப்பதாவது, “மதமாற்றம் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் நாடுகளை பிரிப்பதே இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தம்.
பிரச்சார பயணம் இன்றோடு முடிந்து விடாது. இனிதான் தெருத்தெருவாக வீடுவீடாக இன்னும் தீவிரமாக பிரச்சார பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இன்று இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் நிறைவு விழா என்று சொல்கிறார்கள்.
பெரியார் சிலை
அதுவல்ல, இன்றுதான் தொடக்கவிழா, எப்படி சொல்கிறேன் என்றால், ஸ்ரீரங்கநாதனைக் கும்பிடுவதற்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் கோயிலுக்குள் போய் வருகிறார்கள். அங்கே எதிரே இருக்கின்ற ஒரு சிலை, கடவுளே இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் நம் இந்துக்களின் எழுச்சி நாள்.”
என்று கூறியுள்ளார். கனல் கண்ணனின் இந்த பேச்சுக்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், அவரை கைது செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.
தலைமறைவு
அதனைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பின்னர், கனல் கண்ணனை கைது செய்ய மதுரவாயல் வீட்டிற்குச் சென்ற சைபர் கிரைம் போலீசார், அங்கு அவர் இல்லாததால் வடபழனி, வளசரவாக்கம் வீடுகளிலும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அங்கும் அவர் இல்லை. ஆகையால் தலைமறைவாக உள்ள கனல் கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்