பெரியாரை ஏன் கொண்டாடனும்? அப்படி என்ன செய்து விட்டார்?
1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி, தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் ஈரோட்டில் பிறந்த ஒரு குழந்தை, 1973ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி வரை இந்த பூமியில் வளர்ந்தது, வாழ்ந்தது.
அந்த வாழ்நாளில் 8 ஆயிரத்து 200 நாட்கள் மக்களை நோக்கிய பயணத்திற்கும், 21 ஆயிரத்து 400 மணிநேரத்தை மக்களிடம் பேசுவதற்குமே செலவானது! இந்த அதிசயம் தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி என்பவரின் வாழ்க்கையில்தான் நடந்தது.
பெரும்பாலும், தலைவர்கள் அல்லது மதிக்கப்படக்கூடிய ஒருவர் என்றால் அவரது பிறந்தநாளுக்கும், நினைவு நாளுக்கும் மட்டுமே அவர்கள் பேசுபொருளாக இருப்பார்கள். ஆனால் பெரியார் விஷயத்தில் ஆச்சரியம் என்னவென்றால், பிரச்சினை எதுவாக இருந்தாலும் தீர்வாகவோ அல்லது திருப்பமாகவோ பெரியாரின் பெயரும் அதில்பேசுபொருளாக அடிபடும்.
முன்பு இல்லாத அளவுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் பெரியார் குறித்த பேச்சும் கருத்துகளும் கணிசமாக அதிகரித்துவருகின்றன.
பெரியார் ஏன் பேசப்படுகிறார்?
ஏனென்றால், தன்னிச்சையான சுய சிந்தனையால் எந்த ஒரு பிரச்சினைக்கும் நேரடித் தீர்வுகளை பெரியாரால் சிந்திக்க முடிந்தது.
எல்லாத் தலைவர்களையும் போலவே, பெரியாரின் முன்னெடுப்புகளும் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறிச் சந்தித்தன. ஆனால், மற்றவர்களிடமிருந்து பெரியார் என்கிற தலைவர் வேறுபடும் முக்கிய இடம், பிரச்சினைகளை அவர் பார்க்கும் கோணம். அதை அவர் முன்வைக்கும் விதம். அதைப் பரப்ப அவர் மேற்கொண்ட உழைப்பு.
மெருகேறிவந்த சிந்தனை:
நோய் என்ன, அதற்கான மருந்து என்ன என்பதைத் தீவிரமாகச் சிந்தித்த அவர், நாளுக்கு நாள் அந்தச் சிந்தனையை மெருகேற்றிக்கொண்டேவந்தார்.
அதனால் அவருடைய தீர்வுகளும் செம்மைப்படுத்தபட்டன. நடைமுறை சார்ந்த வெளிப்படையான சிந்தனையும், எளிய மக்களின் வாழ்க்கை குறித்த ஆழமான புரிதலும், அதை எளிய மக்களின் மொழியிலேயே எடுத்துச் சொல்லும் திறனும் பெரியாருக்குக் கூடுதல் சிறப்புகளாக அமைந்தன.அவையே அவரைத் தனித்து நிறுத்தின. இன்றுவரையிலும் நிறுத்துகின்றன.
எப்படிக் கேள்வி கேட்பது?
பெரியாருக்கு முன்பும் எளிய மக்களுக்காகக் கேள்விகளைக் கேட்டவர்கள் உண்டு. ஆனால் கேள்வி கேட்கப்படும் இடத்தையும் தொனியையும்மாற்றி அமைத்தவர் பெரியார். கீழே இருந்துகொண்டு மேலே பார்த்துக் கோரிக்கை வைப்பது என்பது ஒரு வகை. மேலே இருப்பவரையே கேள்வி கேட்க வைப்பது ஒரு வகை. ஆனால், அடித்தட்டில் இருந்தாலும், ஆணித்தரமான தொனியோடு கேள்விகளைக் கேட்க வேண்டும் என்கிற முறைமையை க் கொண்டுவந்தவர் பெரியார். கெஞ்சுவது அல்ல. உரிமைகளை உரத்த குரலில் கேட்பது. இதுவே பெரியாரின் குரல். நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் அவர் மாற்றங்களை ஏற்காமலும் இருந்ததில்லை. தன் கொள்கைக்குச் சார்பானவர்கள் என்பதால் சமரசங்களை ஏற்றுக்கொண்டதுமில்லை.
பெரியாரின் கொள்கை எது?
பெரியாரின் கொள்கைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் கடவுள் மறுப்பு என்பது பெரியாரின் கொள்கையே கிடையாது என்பது அதிகம் கவனிக்கப்படாத உண்மை. “சாதி ஒழிப்பே எனது குறிக்கோள். ஆனால் சாதி அமைப்பு கடவுளின் மேல் கட்டப்பட்டிருப்பதால் நான் கடவுளையும் மறுக்கிறேன்” என்பதே நீங்கள் கடவுளியல் கோட்பாட்டுக்கு எதிரானவரா என்ற கேள்விக்கு பெரியார் அளித்த பதில்.
நுட்பமாகப் பார்த்தால், பெரியாரின் அடிப்படையான குரல் எல்லா வகையான ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரானது. சமத்துவத்தை விழைவது. பெண் உரிமை, சமத்துவம், சமூக நீதி, ஒடுக்கப்பட்டோர் நலன், கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை எனப் பல விதங்களில் பெரியாரைப் பார்க்க முடியும். திருமணம் என்பதில் புனிதம் ஏதுமில்லை. அது ஆண் - பெண் இடையிலான ஒப்பந்தம் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை என்கிற உண்மையை உடைத்துச் சொன்னவர் பெரியார்.
இத்தனை ஆண்டுகள் கடந்தும் இவர் பேசுபொருளாகவே இருப்பதற்குக் காரணம் எந்த ஒரு பெரிய சிக்கலுக்கும் இவரால் சொல்ல முடிந்த எளிய, நேரடித் தீர்வுகள்தான். உணர்ச்சிப் பிசுக்குகள் அற்ற யதார்த்தமான பார்வைதான். பிரச்சினைகள் பேசப்படும்வரை பெரியாரும் பேசப்படுவார்!