குவைத் தீ விபத்து - மத்திய அரசுக்கு கமலஹாசன் உருக்கமான வேண்டுகோள்
குவைத் அடுக்குமாடி கட்டிட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத் தீ விபத்து
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தில் சுமார் 195 பேர் இருந்துள்ளனர். இந்த, குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் பலர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்தனர். அதில் தீயில் கருகி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியர்களில் இருவர் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசன்
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.