கள்ளக்குறிச்சி விவகாரம் - நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Tamil nadu Attempted Murder Kallakurichi School Death Kallakurichi
By Sumathi Jul 29, 2022 06:33 AM GMT
Report

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிறையில் உள்ள பள்ளி நிர்வாகிகள் 5 பேர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம்

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, மர்மமான முறையில் இறந்தார். அவர் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி விவகாரம் - நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு | Kallakurichi School 5 Authorities Cbcid Custody

ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது

இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர், வேதியியல் ஆசிரியை, கணித ஆசிரியை ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (பிரிவு 305), பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் (பிரிவு 75) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம் - நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு | Kallakurichi School 5 Authorities Cbcid Custody

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரையும் 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

தீவிர விசாரணை

இதில் நீதிபதி புஷ்பராணி பள்ளி நிர்வாகிகள் 5 பேரை 24 மணிநேரத்திற்கு சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.விடுதி அறையில் இருந்து மாணவி எந்த நேரத்திற்கு வெளியே சென்றார், அவர் வெளியே சென்றதை யாரேனும் பார்த்தார்களா? பள்ளியின் 3-வது மாடியில் ஏன் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை.

ஸ்ரீமதி எழுதியதாக சமூக வலைதளங்களில் வெளியான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி ஆசிரியர்கள் யாரேனும் அவரை டார்ச்சர் செய்தனரா என்று அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பி, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் 5 பேரும் பதில் அளித்தனர்.

 ஜாமீன்  ஒத்திவைப்பு

ஒரு சில கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறியதாகவும் தகவல் வெளியாகியது. சுமார் பத்து மணி நேர விசாரணைக்கு பின்னர், அவர்களை உடனடியாக இரவோடு இரவாக கொண்டு சென்று நீதிபதி புஷ்பராணி வீட்டில் அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்கள் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து ஜாமீன் விசாரணை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.