கள்ளக்குறிச்சி விவகாரம் - 63 யூடியூப் சேனல்களை முடக்க உத்தரவு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில், வதந்தி பரப்பிய 63 யூடியூப் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி மரணம்
கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, மர்மமான முறையில் இறந்தார். அவர் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 பேர் கைது
இந்த கலவரத்தின்போது அந்த பள்ளி சூறையாடப்பட்டது. இதனிடையே மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர், வேதியியல் ஆசிரியை, கணித ஆசிரியை ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (பிரிவு 305), பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் (பிரிவு 75) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜாமீன்
இதனையடுத்து அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி பேசுகையில், மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஒரு கோணத்திலும், கலவரம் தொடர்பான வழக்கு மற்றொரு கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
63 யூடியூப் சேனல் முடக்கம்
பள்ளித் தாளாளர் வேறு சில குற்றவாளிகளுடன் தொடர்பு உடையவர் என்பதால் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக ஊடங்களை முடக்கும் வேலைகளும் நடைபெற்று வருகிறது.
அதன் படி 63 யூடியூப் தளங்கள், 31 ட்விட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவை பதிவிட்டதை நீக்கவேண்டும் என்றும் ஒரு வேளை நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தவறான தகவல்
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் கற்பித்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் பாடங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது இரண்டு வாரங்களில் சரிசெய்யப்படும். தொடர்ந்து பேசிய நீதிபதி, மாணவர்கள் நேரடியாக வந்து கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை விரைந்து எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பும் பட்சத்தில்
அந்த யூடியூப் தளங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 29 ஆம் தேதி தள்ளி வைத்தார்.