கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் -சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு?அதிமுக சரமாரி கேள்வி
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு உள்ளது என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.
விஷச் சாராய மரணம்
கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்த விவகாரத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபலச் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா உள்பட 21 பேரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக தரப்பில் மட்டுமின்றி பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை காவல்துறைக்குத் தெரிந்தே நடந்துள்ளதாகவும், தங்களது பணியை செய்யாத காவல்துறை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
அதிமுக கேள்வி
மேலும் , கர்நாடகா, பாண்டிச்சேரி மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்குக் கள்ளச்சாராயம் வருவதாகவும் கூறிய அவர் ,'' சிபிஐ-யால் மட்டுமே விசாரிக்க முடியும் எனவும் சிபிசிஐடி விசாரணை நடத்தினால் தவறு செய்தவர்கள் தப்பிவிடுவார்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்கப்படுவதாக வெறும் குற்றச்சாட்டு மட்டுமே சொல்லப்பட்ட அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது . ஆனால் கள்ளக்குறிச்சியில் தவறு நடந்துததற்கு ஆதாரமாக 73 பேரின் மரணங்கள் உள்ளது .
இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தவறு எனவும் அதிமுக வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
மேலும் வாதங்கள் நிறைவடையாததையடுத்து வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் 10ம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் .