பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழா - ஸ்டாலின் பெருமிதம்!
மதுரையில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், சுமார் 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது.
இன்று இதன் திறப்பு விழா நடைபெற்றது, இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
ஸ்டாலின் திறப்பு
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் திறந்து வைத்தார். முன்னதாக நூலகத்தின் வாயிலில் உள்ள கலைஞர் சிலையை முதல்வர் திறந்து வைத்து கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, இந்த நூலகத்தில் இருந்த வருகைப் பதிவேட்டில், “கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை மதுரையில் திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அயராது உழைப்போம், வாழ்க கலைஞர்” என தனது கருத்துகளை பதிவிட்டு கையெழுத்திட்டார். பிறகு அவர் அந்த நூலகத்தில் உள்ள அரங்குகளை பார்வையிட்டார்.