திருநங்கைகளுக்கும் கலைஞர் மகளிர் தொகை...அமைச்சர் கீதாஜீவன் தகவல்
விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்குவது குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பினை வெளியிடுவார் என தமிழக சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை
திமுக அரசு 2021-ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தின் திமுக அரசு அளித்த முக்கிய வாக்குறுதி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம். ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகள் கழித்து கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான அண்ணாவின் பிறந்தநாளில் துவங்கி வைத்தார்.இந்த திட்டத்தில் பயன்பெற மொத்தமாக தமிழகம் முழுவதும் 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த தொகை அளிக்கப்பட்டது.
தமிழக பட்ஜெட்டில் இதற்காக மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அப்போது நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பினை வெளியிட்டார்.இதில், சில இடங்களில் தகுதி இருந்தும் விண்ணப்பம் புறக்கணிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இ-சேவை மையம் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கீதாஜீவன் தகவல்
இதற்கிடையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் கீதாஜீவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என குறிப்பிட்டு, 1,000 உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் அக்டோபர் 18-ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என தகவல் அளித்தார்.
மேலும், திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என கூறிய அமைச்சர் கீதா ஜீவன், அதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது என்றும் கூறினார்.