"மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான்" - கிராமசபை கூட்டங்களை துவங்கி வைத்த முதல்வர்..!
தேசத்தந்தை என போற்றப்படும் காந்தியடிகளின் பிறந்தநாளான இன்று கிராமசபை கூட்டங்களை முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
முக ஸ்டாலின் வீடியோ
இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் கிராம சபை கூட்டம் தடையில்லாமல் நடைபெற்று வருகிறது. மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். காஞ்சிபுரம் அருகிலுள்ள உத்திரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயக தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டில் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குடஓலை முறையை பின்பற்றி தேர்தல் நடைபெற்றது. கிராம சபை என்ற அமைப்பு தமிழகத்தில் சோழர் காலம் தொட்டே பின்பற்றப்பட்டு வருகிறது.
மக்களாட்சியின் ஆணி வேராக இருக்கக்கூடிய கிராம சபை கூட்டத்தில் மக்களே நேரடியாக விவாதித்து தங்களுடைய வேதனைகளை கேட்டு பெறுகிறார்கள். இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில் சட்டமன்றம் இருப்பது போல கிராமத்தில் கிராம சபை மக்கள் குரலை எதிரொலிக்கிறது. கிராம சபைகள் ஆண்டுக்கு இரன்டு முறை நடைபெற வேண்டும் என்ற தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் குறிப்பிட்டிருந்தாலும், ஆண்டுக்கு நன்கு முறை என்ற கலைஞர் மாற்றியமைத்தார். திமுக அரசு 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் என்று மாற்றியமைத்துள்ளோம்.
மக்கள் பணியாற்ற கேட்டுக்கொள்கிறேன்
ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம், நிதி ஆதாரங்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும். பணிகளில் முன்னேற்றத்தை கண்காணித்தல்,. ஊராட்சிகளின் வரவு செலவுகளை ஆராய்தல், பயனாளிகளை தேர்வு செய்தல், திட்ட கண்காணிப்பு செய்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் 1000 ரூபாய் முதல் 5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நலிந்தோர், வறியோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், குழந்தைகள் நலன் போன்றவற்றில் அதீத ஈடுபாடு காட்ட வேண்டும். கல்விக்காக நம் அரசு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் கிராமங்களுக்கு சென்றடைய வேண்டும்.
கிராம சபை கருத்து பரிமாற்ற களமாக கருதி மக்கள் கலந்து கொள்ளவேண்டும். மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், அதிகளவில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம சபைகளில் அவர்களின் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஊரக பகுதியில் அதிகளவில் பணப்புழக்கம் ஏற்பட மகளிர் உதவி தொகை காரணமாக அமைந்துள்ளது. கிராமங்களுக்கிடையே முன்னேற்றத்திற்காக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.