K-Pop பாடல் கேட்டால் மரண தண்டனையா? தூக்கிலிடப்பட்ட இளைஞர் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
K-Pop பாடல் கேட்டதற்காக வடகொரியாவில் 22 வயது இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
K-pop இசை
2022 ஆம் ஆண்டில், K-pop இசை கேட்டதற்காகவும், தென் கொரியப் படங்களைப் பகிர்ந்ததற்காகவும், 22 வயது இளைஞர் ஒருவரை வட கொரியா அரசு பொது வெளியில் தூக்கிலிட்டதாக தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் மனித உரிமைகள் அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த அறிக்கையின்படி , தெற்கு ஹ்வாங்கே மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் 70 K-Pop பாடல்களைக் கேட்டதாகவும், 3 தென் கொரியப் படங்களைப் பார்த்ததாகவும், அதை பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார்.
வட கொரியா தனது குடிமக்கள் அணுகும் தகவல்களின் மீது கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது. மேலும், அவற்றை மீறுபவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனைகள் அறிவித்துள்ளது.
வட கொரியா
2020 ம் ஆண்டு வடகொரியா "பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாச்சாரத்தை" தடை செய்யும் சட்டத்தின் மூலம் வெளிப்புற கலாச்சாரத்தின் மீதான தனது பிடியை இறுக்கியது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தீங்கு விளைவிக்கும் என்று கருதும் மேற்கத்திய தாக்கங்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகவே வட கொரிய அரசாங்கம் இந்த சட்டத்தை கருதுகிறது. தன் மீது வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை வடகொரியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
வடகொரியா அரசதலைவரின் ஆளுமையை சிறுமைப்படுத்தவே இது போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக கருதுகிறது. இந்த மேற்கத்திய கலாச்சாரத்துக்கு எதிரான தடை சட்டங்கள் முன்னாள் தலைவரான கிம் ஜாங்-இல் ஆட்சியின் கீழ் தொடங்கியது, தற்போது அவரது மகன் கிம் ஜாங்-உன் கீழ் மிகவும் தீவிரமானது.