கல்லை நட்டு சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு மூடநம்பிக்கை நிலவுகிறது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை!
சுவாமி சிலை என சாலையோரத்தில் நடப்பட்டுள்ள கல்லை போலீஸார் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
மனுத்தாக்கல்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும், எனவே அந்தக் கல்லை அகற்ற போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரி சக்தி முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக, புகார் அளித்தபோது, இது உரிமையியல் பிரச்னை என காவல்துறையினர் புகாரை முடித்துவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி உத்தரவு
அப்போது இவ்வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை ஆய்வு செய்த நீதிபதி "சாலையோரத்தில் கல்லை நட்டு, துணியைப் போர்த்தி, பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது.
சாலையில் நடப்பட்டுள்ள அந்த கல் சிலையா, இல்லையா என்பதை உரிமையியல் நீதிமன்றம் முடிவு எடுப்பது என்பது சாத்தியமற்றது. மேலும் இதற்காக இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பது என்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்.
எனவே மனுதாரரின் புகாரின் அடிப்படையில் அவருடைய நிலத்துக்கு அருகில் சாலையோரத்தில் நடப்பட்டுள்ள கல்லை போலீஸார் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.