விஜயநகர பேரரசின் தலைநகராக இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் அசுரவளர்ச்சியின் வரலாறு தெரியுமா?
சென்னையின் புறநகர் செங்கல்பட்டு மாவட்டம் தொழிலிலும், பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைந்த வரலாற்றை குறித்து இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
செங்கல்பட்டு
சென்னை வளர்ச்சியடைய துவங்கிய காலகட்டம் முதல் சென்னையின் புறநகர் பகுதிகளும் வேகமாக வளர துவங்கின. குறிப்பாக, இதில் தொழில் துறை வளர்ச்சிகளையும், மக்கள் வாழ்வாதாரத்தையும் வேகமாக வளர்த்து கொண்டது செங்கல்பட்டு மாவட்டம் தான்.
மிக பெரிய மாவட்டமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் இருந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. பின்னர் 24 ஆகஸ்ட் 2021-ஆம் ஆண்டு செங்கல்பட்டு நகராட்சியில் அஞ்சூர், குன்னவாக்கம், திம்மாவரம், வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர், சிங்கபெருமாள்கோயில், புலிப்பாக்கம், வீராபுரம், பட்டரவாக்கம், பழவேலி, செட்டிப் புண்ணியம், திருமணி ஆகிய கிராமங்களை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்டன.
பெயர் காரணம்
அனைத்து ஊர்களை போலவே, செங்கல்பட்டும் அதன் நிலப்பரப்பை தழுவியே பெயர் பெற்றது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் அதிகமாக நிறைந்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை கொண்டு, செங்கழுநீர்ப்பட்டு முதலில் அழைக்கப்பட்டது. அந்த பெயர் காலப்போக்கில் மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படத்துவங்கியுள்ளது.
வரலாறு
விஜயநகர மன்னர்களின் தலைநகராக செங்கல்பட்டு முன்பு இருந்ததுள்ளது. விஜயநகர மன்னர்களால் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செங்கல்பட்டு கோட்டை, அதன் பக்கவாட்டில் உள்ள ஏரி ஆகியவை விஜயநகர பேரரசுவின் முக்கியத்துவம் வாய்ந்தது பகுதிகளாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.
1639 ஆம் ஆண்டில் உள்ளூர் ஆளுநர் ஒருவரால், செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடத்தை வணிகத்திற்காக வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினார். அதுவே பின்நாளில் மெட்ராஸ் நகரின் முக்கிய இடமாக மாறியது. செங்கல்பட்டு 1751 இல் பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டு நிலையில், மீண்டும் 1752 ஆம் ஆண்டில் ராபர்ட் கிளைவ்'வால் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் சென்றது.
தொழிற்சாலைகள்
சென்னைக்கு மிக அருகில் இருக்கும் புறநகர் பகுதி என்பதால் செங்கல்பட்டு பகுதிகளில் நிறைய தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன. தகவல் தொழில்நுட்பம் முதல், கார் தயாரிப்பு நிறுவனம் வரை பல தொழிற்சாலைகள் அடுத்தடுத்து இங்கு நிறுவப்பட்டன.
பிரபலமான டெக் மஹிந்திரா, விப்ரோ, பி.எம்.டபிள்யூ, போர்டு, ப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கான், டெல், சாம்சங், இன்ஃபோசிஸ், பெப்சி, டிவிஎஸ், சீமென்ஸ், நிசான் ரெனால்ட், அப்பல்லோ டயர்ஸ், மஹிந்திரா ஆர் & டி ஆகிய தொழிற்சாலைகள் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள தொழிற்சாலைகள் ஆகும்.
வேகமாக இந்த மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, இந்த பகுதி வேகமாக வளர இதுவே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தொழில் வேகமாக வளரும் பட்சத்தில், அங்கே மக்களும் குடியேற செய்வார்கள். அவ்வாறே செங்கல்பட்டு மிகவும் வேகமாக வளர்ந்தது.
மகாபலிபுரம்
முக்கியமான நினைவுச் சின்னங்கள் மற்றும் குகைக் கோயில்கள் அமைந்துள்ள நகரமான இங்கு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். கோவாவைப் போன்று வெளிநாட்டவர்களின் வருகையை நம்பி தங்கும் விடுதிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் உள்ளனர். மேலும், சின்னச் சின்னக் கடைகளை நடத்துபவர்களும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் நம்பி உள்ளனர்.
சிற்ப நகரமான மாமல்லபுரத்தில் சிற்பங்கள் வடிவமைக்கும் கடைகளை அதிக எண்ணிக்கையில் காணலாம். இங்கிருந்து, உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் கற்சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு காலத்தில் பல்லவர்களின் ஆட்சிக்கு உள்பட்டிருந்த மாமல்லபுரத்தில் துறைமுகமும் இருந்தது. கடல் வழியாக வாணிபமும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
தமிழகத்தின் மிக முக்கிய பறவைகளின் சரணாலயங்களுள் ஒன்று வேடந்தாங்கல். ஆங்கிலேய ஆட்சியாளர்களால் 1858-இல் தொடங்கப்பட்ட இந்த சரணாலயம் சுமார் 160 ஆண்டுகாலமாக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.
சிறப்பம்சங்கள்
இங்குள்ள ஏரியின் பரப்பளவு 75 ஏக்கர். உள்பகுதியில் கடம்ப மற்றும் வேல மரங்கள் நிறைந்து உள்ளது. இம்மரங்களின் மேற்கிளைகளில் கூடு கட்டி முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்யவும் தங்கி செல்லவும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியைத் தேடி வருகின்றன.
வேடந்தாங்கலுக்கு அழையா வெளிநாட்டு விருந்தாளிகளாக, பாம்புதாரா, கரண்டிவாயன், கூழைக்கடா, அரிவாள்மூக்கன், வெள்ளை அரிவாள்மூக்கன், முக்குளிப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன.பறவைகள் இங்கு வருவதற்கு முக்கிய காரணமாக இங்கு நிலவும் பருவநிலையும், இனவிருத்தி செய்து தங்கள் வம்சத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சீசன் காலமாக உள்ளது.
கந்தசாமி கோவில், திருப்போரூர்
பல்லவ மன்னர்களின் காலத்திலேயே இங்கு கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அருகில் குளம் ஒன்றும் அமைந்துள்ளது. மிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் "புனிதப் போரின் இடம்" என்பது ஆகும்.பதின்மூன்றாவது நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டில், இவ்வூர் தொண்டை நாட்டில் ஆமூர் கோட்டத்தில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று குறித்திருக்கிறது.
இந்த ஊருக்கு அந்த நாளிலே சமரபுரி என்ற பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலை விட, இங்குள்ள முருகனைப் பற்றிச் சிதம்பர சுவாமிகள் பாடிய 'திருப்போரூர் சந்நிதி முறை' என்ற பிரபந்தம் இலக்கியப் பிரசித்தி பெற்றதாகும்.
கந்த புராணத்தின் படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டி வீழ்த்தியுள்ளார். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் கூறப்படுகிறது. திருப்போரூரில் தான் முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது.