அதிபர் தேர்தலிலிருந்து விலகிய ஜோ பைடன் - தமிழ்நாட்டு பூர்விகம் கொண்ட புதிய வேட்பாளர்?
அமெரிக்கா அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
வரும் நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரங்களில் ஜோ பைடன் திணறுவதாகவும், அவரது உடல் நிலையை காரணம் காட்டி அவர் தேர்தல் போட்டியிலிருந்து விலக வேண்டுமென்றும் சொந்த கட்சியினரே கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். முன்னாள் அதிபர் ஒபாமா கூட, ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வேண்டுகோள் வைத்தார்.
ஜோ பைடன்
இந்நிலையில், அமெரிக்க தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு மற்றும் கட்சியின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், எஞ்சிய காலத்தை மீதமுள்ள எனது பதவிக்காலத்தில் எனது கடமைகளைச் செய்வதில் எனது முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன். என கூறியுள்ளார்.
— Joe Biden (@JoeBiden) July 21, 2024
மேலும், தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்வதற்கு எனது ஆதரவை வழங்குகிறேன் என கூறியுள்ளார். வரும் ஆகஸ்ட் 19 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை ஜனநாயகக் கட்சியின் மாநாடு சிகாகோவில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் வேட்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலா ஹாரிஸ்
ஜோ பைடனின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், அமெரிக்க மக்களின் சார்பாக அதிபர் ஜோ பைடனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க நாட்டுக்காக பல ஆண்டுகள் சிறப்பான தலைமைப்பண்பு அவர் பணியாற்றி உள்ளார். கட்சியின் வேட்பாளராக அதிபர் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அது எனக்கு கவுரவம் அளிக்கிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் நான் வெற்றி பெற விரும்புகிறேன். அதுவே எனது எண்ணமும் கூட. கட்சியையும், தேசத்தையும் ஒருங்கிணைத்து தேர்தலில் ட்ரம்பை வீழத்துவேன்” என தெரிவித்துள்ளார்.
On behalf of the American people, I thank Joe Biden for his extraordinary leadership as President of the United States and for his decades of service to our country.
— Kamala Harris (@KamalaHarris) July 21, 2024
I am honored to have the President’s endorsement and my intention is to earn and win this nomination.
சமீபத்தில் நடந்த டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு அவருக்கு பெரிய அளவில் ஆதரவை உருவாக்கியுள்ளதால் டிரம்பிற்கு கடுமையான போட்டியை அளிக்க கூடிய வேட்பாளரை களத்தில் இறக்க ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது. அவ்வாறு கமலா ஹாரிஸ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கருப்பின பெண் என அறியப்படுவார். ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார்.
ஷியாமலா கோபலன்
டொனால்ட் ஜே ஹாரிஸ் - ஷியாமலா கோபலன் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். ஜமைக்காவை பூர்விகமாக கொண்டவர் அவர் தந்தை டொனால்ட் ஜே ஹாரிஸ். கமலா ஹாரிஸுக்கு 7 வயதாக இருந்த போதே அவரது பெற்றோர் விவகாரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பிறகு, கமலா ஹாரிஸ் தனது தாய் உடன் வசிக்கத் தொடங்கினார்.
அவரது தாய் ஷியாமலா கோபலன் சென்னையில் பிறந்தவர். ஷியாமலா கோபலனின் தந்தை பி.வி.கோபாலன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்விகமாக கொண்டவர். கடந்த 2020 தேர்தல் நேரத்தில் அவர் சென்னை கடற்கரையில் தனது தாத்தா கையை பிடித்து நடந்த நினைவுகள் குறித்துப் பகிர்ந்து கொண்டு இருந்தார் கமலா ஹாரிஸ்.