ஜார்க்கண்ட் தேர்தல்; மீண்டும் முதல்வராகிறாரா ஹேமந்த் சோரன்?
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலின்வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்தார்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சம்பாய் சோரன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
ஜார்க்கண்ட் தேர்தல்
5 மாதங்களுக்கு பிறகு ஹேமந்த் சோரனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து மீண்டும் அவரை சட்டப்பேரவை கட்சி தலைவராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். இதனால் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அதிருப்தியில் இருந்த அவர் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரு கட்டங்களையும் சேர்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவானதில் இருந்து சட்டமன்ற தேர்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று(23.11.2024) காலை முதல் நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சியை கைப்பற்ற 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
மீண்டும் ஹேமந்த் சோரன்
இந்நிலையில் காலை 12;45 நிலவரப்படி கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணி 30 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை பெற்று வருகிறது.
ஆட்சி அமைக்க 81 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகித்து ஏறக்குறைய ஆட்சியை தக்கவைப்பதை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் 4வது முறையாக ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.