ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் - பிரச்சாரத்தில் இறங்க உள்ள தோனி
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான தூதராக தோனியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தல்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலமையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் கூட்டணி
இதற்கான வாக்கு எண்னிக்கை நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்க வைக்க கடும் முனைப்பில் உள்ளது.
ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பாஜக ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்து தீவிரமாக இயங்கி வருகிறது. முன்னாள் முதல்வர் சம்பை சோரன் பாஜகவில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார்.
தோனி
இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தனது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என ஜார்க்கண்ட் தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களை தேர்தலில் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தோனி மேற்கொள்வார்.