கைதான ஹேமந்த் சோரன்; மனைவி புதிய முதல்வராகிறாரா? எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு!
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேமந்த் சோரன் கைது
சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேர விசாரணைக்குப் பின் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சம்பய் சோரன்?
இதை கண்டித்து ஜேஎம்எம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் பதவியேற்க உள்ளார்.
இதற்கான ஆதரவு கடிதங்களை ஆளுநரிடம் ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏக்கள் வழங்கினர். செராய் கெல்லா தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பய் சோரன்(67) இதுவரை 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
இதற்கிடையில், ஹேமந்த் சோரன் தனது மனைவி கல்பனா சோரனை முதல்வராக்க முடிவு செய்ததில் ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் பின்வாங்கியதாக தெரிகிறது.