ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் தரப்பட்டதா - அறிக்கையின் தகவல் இதுதான்..
ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா மரணம்
தமிழக சட்டசபையில் நேற்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்ற தகவல்கள், பரிந்துரைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா டிச. 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிச. 4ம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விசாரணை
சசிகலா, ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சசிகலா, கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணைக்கு கோரப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்திருக்கிறது.
மெல்லக் கொல்லும் விஷம்?
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போதும், பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தும், அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் அளிக்கப்பட்டிருக்கும் என்று எந்த பிரேத பரிசோதனை அறிக்கையோ, மருத்துவரோ கருத்து தெரிவிக்கவில்லை.
ரத்த பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் விஷத்தின் தடயம் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். எனவே இக்குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லாததால் தவறானது; ஆதாரமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.