தெருவில் நடமாட முடியாது - ஜெயலலிதா குறித்து விமர்சனம்!! கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!!
ஜெயலலிதா குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் கருத்து
ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படம் பெரும் வெற்றியை பெற்றது. அதில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் "நீலாம்பரி" ரம்யா கிருஷ்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அப்போதைய அரசியல் சூழ்நிலையை கொண்டு அந்த கதாபாத்திரம் ஜெயலலிதா தான் என்ற செய்திகள் பல வெளியாகின.
அதனை தொடர்ந்து அது குறித்து எந்த விவாதங்களும் பெரிதாக பிறகு வெளிவரவில்லை. ஆனால், சமீபத்தில் படம் குறித்து பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் நீலாம்பரி கேரக்டரை உருவாக்கினேன் என கூறி இருந்தார்.
அம்மா நீலாம்பரியா..?
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.எஸ்.ரவிக்குமாருக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.இது குறித்து பேசிய அவர், அம்மாவின் நல்ல குணம் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் தெரியும் என்றும் அப்படிப்பட்ட குணம் கொண்டவராக இருப்பதால் தான் அவர் இறந்த பின்பும் அவரை உலகமே போற்றுகிறது என்றார்.
அப்படிப்பட்ட ஜெயலலிதாவை நீலாம்பரி கேரக்டரோடு ஒப்பிட்டு பேசலாமா? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், மறைந்த ஒரு முதலமைச்சரை இப்போ மீண்டும் இழுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று வினவி, உண்மையிலேயே அவர் வீரனாக இருந்தால் படம் ரிலீஸ் ஆன நேரத்திலேயே அம்மா உயிரோடு இருக்கும்போதே சொல்லியிருக்கனும் என்று கூறினார்.
அப்போது சொல்லியிருந்தால் பின்விளைவுகள் தெரிஞ்சிருக்கும் என்ற ஜெயக்குமார், தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக மறைந்த தலைவரை கொச்சைப்படுத்தி பேசுவது சரியல்ல என்று விமர்சித்து, இனிமேல் இதுபோன்ற கருத்துகளை அவர் தெரிவிச்சா வீதியில் நடமாட முடியாத சூழ்நிலை வரும் என எச்சரிக்கை செய்தார்.