இது கார் ரேஸ்ஸா இல்லை நாய் ரேஸ்ஸா - ஜெயக்குமார் கிண்டல்
இது கார் ரேஸா இல்லை நாய் ரேஸா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பில் அவர் பேசியதாவது, "திமுக அரசு ஒரு முதலாளித்துவ கார்பரேட் அரசு. ஏழை எளிய மாணவர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டுவர பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும்.
ஆனால் இந்த அரசு அது போன்ற எந்த ஒரு செயலையும் செய்யவில்லை. இந்த பார்முலா 4 கார் ரேஸ் பணக்காரர்களுக்கான விளையாட்டு. முதலில் இது கார் ரேஸா நாய் ரேஸா என்று தெரியவில்லை. ஒரு நாய் உள்ளே புகுந்து ஒரு மணி நேரம் தண்ணி காட்டி உள்ளது. FIA சான்றிதழ் ஏன் முன்னாடியே வாங்கவில்லை. இந்த போட்டி மூலம் வசூலாகும் தொகை யாருக்கு போகும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஎம் ஸ்ரீ
மேலும், "இந்த மாதங்களில் பருவமழை தொடங்கி விடும் அதில் கவனம் செலுத்தாமல் அரசு பார்முலா 4 கார் பந்தயத்தில் மட்டுமே செலுத்தி வருகிறது. காவலர்களை சட்ட ஒழுங்கை கவனிக்க விடாமல் தேவை இல்லாத பார்முலா பந்தய பாதுகாப்புக்கு பயன்படுத்துகிறது.
பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம் என பிப்ரவரி மாதம் கடிதம் எழுதி விட்டு இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கையெழுத்து போடும் முன் பிஎம் ஸ்ரீயில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என ஆராய்ந்து பார்த்து கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
விலை உயர்வு
டாஸ்மாக் வருமானத்தை உயர்த்துவதில் தான் கவனம் செலுத்துகிறார்கள். டாஸ்மாக் வருமானத்தை 35,000 கோடியில் இருந்து 42,000 கோடிக்கு உயர்த்தி சாதனை படைத்து விட்டார்கள்.
18 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக திமுக அரசு வாய் கூசாமல் பொய் பேசுகிறது. அனைத்து தொழில்களும் நசிந்து வருகிறது. மீன் பிடி தொழில், நெசவு தொழில் என அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் மாநில அரசு இப்படி இருக்கிறதென்றால் மற்றோரு புறம் மத்திய அரசு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை 38 ரூபாய் உயர்த்தி உள்ளது. சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்தியுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை பயன்படுத்துவதால் விலைவாசி உயர வாய்ப்புள்ளது." என பேசியுள்ளார்.