அமைச்சர் சொல்லி கொடுப்பதை பேசி மக்களை ஏமாற்றுகிறார் பிரகாஷ் ராஜ் - ஜெயக்குமார் கண்டனம்

Prakash Raj J Jayalalithaa M Karunanidhi D. Jayakumar
By Karthikraja Jun 02, 2024 09:57 AM GMT
Report

 நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் பேச்சு

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவாக சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் வரலாற்று புகைப்பட கண்காட்சி இந்து சமய அறநிலைய துறை சார்பில் நடைபெற்றது. 

prakash raj

இந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், 69% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தவர் கலைஞர் தான் என கூறினார்.

கலைஞர் இருந்திருந்தால் நான் பேசியிருக்க மாட்டேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்

கலைஞர் இருந்திருந்தால் நான் பேசியிருக்க மாட்டேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்


ஜெயக்குமார் கண்டனம்

இவரின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "வரலாற்றை எண்ணி பார்க்காமல் எதாவது புகழ வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்றது போல நடிகர் திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு திரு.கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது.

69% இடஒதுக்கீட்டை மத்திய அரசு‌ வரைமுறைபடுத்த எண்ணும் போது தமிழ்நாட்டில் அன்றைய முதல்வராக இருந்த மாண்புமிகு அம்மா அவர்கள் சமூக நிதிக்கு எதிராக அமைந்துவிடும் என கடுமையாக எதிர்த்தார்.

பின்னர்‌ சட்டமன்றத்தில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆலோசனைக்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த நான் சட்டமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உறுதியளித்தேன். 

jayakumar

இதன் பின்னர் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிசட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு மாண்புமிகு அம்மா தலைமையில் அன்றைய பிரதமர் திரு.நரசிம்ம ராவ் அவர்களை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. பின்னர் நீண்ட வலியுறுத்தலின் மூலம் குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-24,அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாண்புமிகு அம்மா அவர்களின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது. இதற்காக தான் திராவிட கழக தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் அம்மா அவர்களுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கினார்.

இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமால் அமைச்சர் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது! மிகவும் தரம் தாழ்ந்து போன எண்ணத்தின் விளைவு தான் இந்த பேச்சு! இது போன்று வரலாற்றை திரித்துக் கூறுவதை இத்தோடு பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.