2026 தேர்தலில் தனித்து நின்று ஒரு சீட் ஜெயிக்க முடியுமா? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் சவால்
தவெக தலைவர் விஜய் கொடி ஏற்றுவது கூட திமுகவிற்கு பயம் என ஜெயக்குமார் பேசியுள்ளார்.
ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்பொழுது அவர் பேசியதாவது, "திமுகவுக்கும் பாஜகவுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தத்திலிருந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக உள்ளன.
கருணாநிதி சிலையை திறந்து வைக்க சோனியா காந்தியையோ, ராகுல் காந்தியையோ அழைக்கவில்லை. வெங்கய்ய நாயுடுவை அழைத்து வந்து திறந்து வைத்தார்கள். தேர்தல் நடக்கும் போது அண்ணாமலையின் பேச்சு அதிமுகவின் பெருமைகளை சீர் குலைக்கும் வகையில் இருந்தது. திமுகவை எதிர்க்கவில்லை.
ராஜ்நாத் சிங்
திமுகவிற்கு எதிராக ஆளுநரிடம் அண்ணாமலை பைல் கொடுத்தார். திமுக அமைச்சர்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வற்புறுத்தவில்லை. இதெல்லாம் அந்த புரிந்துணர்வு ஒப்பந்ததில் வருகிறது. 39 திமுக எம்பிக்கள் டெல்லியில் வைத்த விருந்துக்கு பாஜக தலைவர் ஜேபி நட்டா அழைக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு ராஜ்நாத் சிங் அழைக்கப்பட்டார், வழக்கமாக கருப்பு நிற பேன்ட் அணியும் முதல்வர் ஸ்டாலின் அன்று ஏன் சந்தன நிற பேன்ட் அணிந்தார். ஏனென்றால் கருப்பு ஃபேண்ட் போட்டால் கோ பேக் மோடி, கோ பேக் ராஜ்நாத் சிங் என்பது போலாகிவிடும் என்று நினைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார். பாஜகவின் கொத்தடிமை டீம் திமுக என கண்கூடாக நிரூபித்து விட்டது.
2026 தேர்தல்
சாயம் வெளுத்துவிட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒருமையில் பேசுகிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் விழாவை தமிழக அரசு நடத்தி விட்டு மத்திய அரசின் விழா என பொய் சொல்கிறார். பாஜகவுக்கு சொம்பு தூக்கும் கட்சியாக, கொத்தடிமையாக திமுக மாறி விட்டது. ஸ்டாலினின் தலைவர் மோடியின் படத்தை போடாமல் அவருக்கு தூக்கம் வராது. நிறைய விஷயங்களில் மத்திய அரசிடம் மாட்டிக்கொண்டுள்ளார்கள். எனவே மோடியின் படத்தை போட்டு அவரை குஷிப்படுத்துகிறார்கள்.
மச்சான் துணை இல்லாமல் மலை ஏற முடியாது என பழமொழி உண்டு. அண்ணாமலைக்கு மலை ஏற எந்த கட்சியும் உறுதுணையாக இல்லை. திமுகவிடம் பேசிக்கொண்டுள்ளார்கள். எங்கள் கட்சியில் மாமன் மச்சான் பழக்கம் எல்லாம் கிடையாது. முளைச்சு மூணு இலை விடல, அதிமுக 50 வருடமாக உள்ள கட்சி, 30 வருடமாக ஆட்சி செய்துள்ளோம். நாங்க போட்ட பிச்சை, பிச்சை என்று சொன்னால் கெளரவமாக இருக்காது. நாங்கள் போட்ட அதை வைத்து 4 சீட் ஜெயித்தார்கள். 2026 தேர்தலில் தனித்து நின்று ஒரு சீட் ஜெயிக்க முடியாது. பாஜகவுக்கு சொந்த காலும் கிடையாது. செல்வாக்கும் கிடையாது. எங்களை பார்த்து பேசுவது வினோதமாக உள்ளது.
ஜனநாயக நாட்டில் கொடி ஏற்றுவதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது. தவெக தலைவர் விஜய் கொடி ஏற்றுவது கூட திமுகவிற்கு பயம், விஜய்க்கு எவ்வளவு தடங்கல் கொடுக்க முடியுமோ அவ்வளவு தடங்கல்களை திமுக கொடுக்கிறது”" என பேசினார்.