பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி; விஜய்யும்தான் - அண்ணாமலை
2026 அரசியல் களத்தை மாமன் மச்சான் என்ற வார்த்தை மாற்றும் என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது, தமிழகத்தை பொறுத்தவரை திமுகவை எதிர்க்க கூடிய அரசியல் கட்சி பாஜக தான். பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் போரட்டங்கள், கட்சி தொண்டர்கள் எத்தனை பேர் சிறைக்கு சென்றுள்ளனர் என கணக்கெடுங்கள், அதிமுகவிலும் கணக்கெடுங்கள்.
தலைவராக என்னையும் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் ஒப்பீடு செய்யுங்கள். 3 வருடங்களில் என் மீது போடப்பட்ட வழக்குகளையும் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்குகளையும் பாருங்கள். விழாவில் கலந்து கொள்ள சொல்லி முதல்வர் என்னை தொலைபேசியில் அழைத்தார். கலந்து கொண்டேன். அதற்காக அவரை விமர்சிப்பதை நிறுத்தப்ப்போவதில்லை. கொடநாடு வழக்கை பற்றி திமுக ஏன் பேசுவதில்லை?
அதிமுக
எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட நெடுஞ்சாலை டெண்டர் வழக்கை ஆர்.எஸ்.பாரதி ஏன் திரும்ப பெறுகிறார்? என் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதில்லை. நாங்கள் கருணாநிதி நாணய விழாவை புறக்கணித்தால் எங்களை நாங்களே அவமதிப்பதற்கு சமம் என கருதுகிறேன்.
திமுகவும் அதிமுகவும் தங்களை மாற்றி மாற்றி பங்காளி என கூறிக்கொண்டு பாஜகவை வளர விட மாட்டோம் என்கிறாரகள். நாங்களும் 3வது பங்காளி தான். நாங்களும் மாமன் மச்சான் தான். 2 பங்காளியும் வேண்டாம் நாங்கள் வருகிறோம் என தமிழக மக்கள் 18% வாக்களித்து எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள்.
அதிமுக அண்ணாமலையின் மீது கக்கும் வன்மத்தை அடக்கி வைக்க வேண்டும். காலை முதல் இரவு வரை புரட்சி தலைவரின் கட்சி என்னை போன்ற சாதாரண மனிதனை வசை பாடுவதை பெருமையாக எடுத்துக்கொள்கிறேன். ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என்பதை முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். மத்திய அரசின் சார்பாக தான் ராஜ்நாத் சிங் வந்தார்.
மாமன் மச்சான் கூட்டணி
2026 தேர்தலில் பங்காளிகள் வேண்டாம். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி. மாமன் மச்சான் கூட்டணி என்பது வேற்றுமையில் ஒற்றுமை. மாமன் மச்சானாக இருப்பதற்கு சாதி மதம் இனம் கிடையாது. பங்காளி என்பது ஒரே இனம் என பேசினார்.
நடிகர் விஜய் மாமன் மச்சானா என்ற கேள்விக்கு எல்லாரும் மாமன் மச்சான் தான் அதில் என்ன சந்தேகம்? மாமன் மச்சான் கூட்டணிக்கு எல்லாருமே வரலாம். 2026 அரசியல் களத்தை மாமன் மச்சான் என்ற வார்த்தை மாற்றும் என பதிலளித்துள்ளார்.