சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை - மேயரை சீண்டிய ஜெயக்குமார்!
சென்னை மேயர் பிறர் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயக்குமார் மனு
சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர் கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி வரும் 17ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
அதற்கு அனுமதி கேட்டு பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக சொல்கிறார்கள், ஆனால் அது முடியவில்லை.
கிளிப்பிள்ளை
சென்னையின் மேயர் பிறர் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருக்கிறார். அதனால்தான் 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறுகிறார். தகுந்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் இறுதி நேரத்தில் அவசர கதியில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மழைக்காலத்தில் சென்னைக்கு பெரும் ஆபத்து வரக்கூடும். சட்டப்பேரவையில் ஓபிஎஸ் தரப்புக்கு இடம் ஒதுக்கும் விவகாரத்தில் சபாநாயகர் சட்டவிதிப்படி நடந்துகொள்ள வேண்டும். ஓபிஎஸ்ஸிடம் கட்சியும் இல்லை, அவரும் கட்சியில் இல்லை. பிறகு எப்படி அவர் அதிமுக வரிசையில் அமர முடியும்.
புறக்கணிப்பட்ட சக்தி
அவருக்கு வேறு எங்காவது இடம் ஒதுக்கட்டும். திமுகவை வீழ்த்துவதற்காகக்கூட டிடிவி தினகரனை அதிமுகவில் இணைத்துக்கொள்ள முடியாது. அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. அதேபோல் அவருடன் இணைவதற்கு அவசியமே இல்லை.
நாங்கள் இணையும் அளவுக்கு டிடிவி, சசிகலா பெரிய சக்தி இல்லை. டிடிவி தினகரன் வேண்டுமென்றால் சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும்.அதிமுக மற்றும் தமிழக மக்களால் புறக்கணிப்பட்ட சக்திதான் சசிகலாவும், டிடிவி தினகரனும்” என்றார்.