மக்களின் ரூ.200 தான் உங்கள் 200 கோடி சம்பளம்; விஜய் மட்டுமே குரல் கொடுத்தார் - ஜெயக்குமார் சாடல்!
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நடிகர்கள் குரல் எழுப்பாததை குறித்து ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
விஷச்சாராயம்
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜெயக்குமார்
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து திரைத்துறையினர் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
‘கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும், சாலைகளிலும் கதறிக் கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது. இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை.
நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர்? ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.
அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.