துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவாதத்திற்கு தயாரா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்

Udhayanidhi Stalin M K Stalin ADMK DMK D. Jayakumar
By Karthikraja Nov 18, 2024 07:30 PM GMT
Report

 உதயநிதி ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

d jayakumar admk

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாரிசு அரசியலையும், குடும்ப ஆட்சியையும் தலைமையிடமாகக் கொண்டு திகழும் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அந்தக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், சமீப காலமாக ஏதேதோ பயத்தில் உளறிக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

அந்த நிறுவனத்திற்காக அம்மா குடிநீர் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் - ஜெயக்குமார்

அந்த நிறுவனத்திற்காக அம்மா குடிநீர் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் - ஜெயக்குமார்

கடலில் பேனா சிலை

தனது குடும்ப வளர்ச்சிக்காக சதா, சர்வ காலமும் சிந்தித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் திட்டங்களைச் செயல்படுத்த நிதி இல்லை என்று கூறிவிட்டு, தனது தந்தை கருணாநிதியை தமிழகத்தின் நவீன கால சிற்பி போன்று உருவகப்படுத்துவதற்காக பன்னாட்டு அரங்கம், கடலில் பேனா சிலை போன்ற மக்களின் வரிப் பணத்தைக்கொண்டு மக்களுக்கு பயன் அளிக்காத திட்டங்களுக்கு செலவிடப்படுவதை சுட்டிக்காட்டினார். 

d jayakumar admk

அதற்கு அடுத்த நாள் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் “இன்றைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதுதான் எங்களை சந்தித்தார்; தற்போது எங்களை சந்திப்பதில்லை. எனவே, 2026 தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்கத் தயாராக உள்ளோம்” எனக் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்களது பொதுச் செயலாளர் எடப்பாடியார், தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்து வருகிறது என தெரிவித்தது சரிதானே.

பொதுவெளியில் விவாதம்

மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின்போது பொய், வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, ஊடகங்களில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் இருப்பதற்கும், வாய்மூடி மவுனியாக இருப்பதற்கும், திசை திருப்பும் நாடகங்களை நடத்தி வருகிறது.

42 மாத ஊழல் மாடல் திமுக ஆட்சியில் மக்களுக்கான புதிய திட்டங்கள் ஏதுமில்லை. இதை எடப்பாடியார் சுட்டிக்காட்டி, எங்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சாதனைகளை துண்டுச் சீட்டின்றி பொதுவெளியில் விவாதம் செய்யத் தயார். முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அதற்கு தயாரா ? என்று கேட்டதற்கு, இதுவரை வாய் திறக்காத UKG குழந்தை ஸ்டாலின், தன் கொடுக்கு LKG-யை உசுப்பிவிட்டு வாய் நீளம் காட்டியிருக்கிறார்.

தன் கட்சி நிகழ்ச்சிகளா, கொடுக்கிற்கே முதலிடம். அரசு நிகழ்ச்சிகளா கொடுக்கிற்கே முதலிடம் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளையும், ஆட்சியின் மூத்த அமைச்சர்களையும் ஓரம் கட்டி திரு.ஸ்டாலின் அவர்கள், எடப்பாடியார் அவர்கள் விட்ட சவாலுக்கு, தன் அப்பரண்ட்டீஸ்சை முன்னிறுத்தி தன்னுடைய இயலாமையைக் காட்டுவது முதலமைச்சர் பதவிக்கே இழுக்கு தேடும் அநாகரீகமான செயல்.

விவாதிக்க தயார்

ஊரில் தங்களைப் பாராட்ட யாருமில்லை என்ற காரணத்தால் அப்பன் மகனைப் புகழ்வதும், மகன் அப்பனை சீராட்டுவதும் என்று மேடைக்கு மேடை ஸ்டாலினும், அவரது கொடுக்கும் ஓரங்க நாடகம் நடத்தித் திரியும் உண்மையை எடப்பாடி பழனிசாமி எடுத்து வைத்ததால் கோபம் கொப்பளிக்கிறதோ? திமுக-வின் நரகல் நடைப் பேச்சாளர்கள் தற்போது குறைந்துவிட்டார்களோ, அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ-என்னவோ, விஷக் கொடுக்கு அந்த வேலையை எடுத்துக்கொண்டு நஞ்சை கக்கி இருக்கிறது. 

d jayakumar admk

இது திமுக எனும் கட்சியை அழிவுப் பாதைக்கு இழுத்துச்செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. காணாததைக் கண்டது போல, மலையைப் பார்த்து ஏதோ ஒன்று குரைப்பதுபோல், எடப்பாடியாரைப் பார்த்து குரைப்பது, தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நப்பாசையில் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறித் திரியும் உதவா நிதிக்கு நாவடக்கம் தேவை.

57 ஆண்டு திராவிட ஆட்சிக் கால வரலாற்றில், தமிழக மக்கள் நலனுக்குரிய திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்றியது அதிமுக ஆட்சியா? அல்லது திமுக-வின் ஊழல் ஆட்சியா? என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க, வாரிசு அடிப்படையில் துணை முதலமைச்சராகி இருக்கும் உதயநிதி தயாரா? அவரோடு விவாதிக்க நான் தயார். இடம், நாள், நேரத்தை விஷக் கொடுக்கே தீர்மானிக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.