சோம்பேறிகளுக்காகவே வந்தாச்சு..மனிதனை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் - சாராம்சம் என்ன?
மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாஷிங் மெஷின்
நம்மில் பலர் சோம்பலாக இருக்கும்போது குளிப்பதை நினைத்தால் கடுப்பாக இருக்கும். அந்த சமயத்தில் நம்மை குளிப்பாட்டி விட ஒரு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்திருகலாம். ஆனால் தற்போது அது சாத்தியம் என்றால் நம்ப முடியுமா?
ஆம் அண்மையில் ஜப்பானில் உள்ள பிரபல நிறுவனமான சயின்ஸ் கோ. லிமிடெட், மனிதர்களுக்கான சலவை இயந்திரத்தைத் தயாரிக்கும் திட்டம் பற்றி தகவல் வெளியிட்டிருந்தது. இந்த மனித சலவை இயந்திரம் பற்றிய கருத்துக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.
கடந்த 1970ம் ஆண்டு ஜப்பான் உலக கண்காட்சியில் 'மனித சலவை இயந்திரம்' ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 'அல்ட்ராசோனிக் பாத்' என்று அழைக்கப்படும் இந்த இயந்திரம் சன்யோ எலெக்ட்ரிக் கோ என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.
அப்போது, உலக நாடுகளின் மத்தியில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சலவை இயந்திரம் வெறும் 15 நிமிடங்களில், அதற்குள் இருக்கும் மனிதரை மசாஜ் செய்துவிட்டு, குளிப்பாட்டி உலர்த்தவும் செய்கிறது. அச்சமயத்தில் இந்த மனித சலவை இயந்திரம் வணிக ரீதியாக ஹிட்டாகவில்லை.
சாராம்சம் என்ன?
எனினும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்த விசித்திரமான கண்டுபிடிப்பு உயர் தொழில்நுட்ப மேம்படுத்தலுடன் மீண்டும் உருவெடுத்துள்ளது. குளியல் மற்றும் சமையலறை கண்டுபிடிப்புகளில் புகழ்பெற்ற சயின்ஸ் கோ. லிமிடெட் என்ற இந்த நிறுவனம், மனித சலவை இயந்திரத்தை உருவாக்குப்போவதாக தெரிவித்தது.
இந்த திட்டத்திற்கு 'உசோயாரோ' என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த இயந்திரம் நுண்குமிழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயங்கும் என்றும், இதனுடன் பல்வேறு கண்காணிப்பு சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதிலுள்ள சென்சார்கள், புத்துணர்வான அனுபவத்தை ஏற்படுத்த, நமது உடலின் வெப்பநிலையை கண்காணித்து அதற்கேற்ப தண்ணீரின் வெப்பநிலை, தண்ணீரின் ஒலி, மசாஜை வழங்குகிறது.
இதன் ஏஐ தொழில்நுட்பமானது, நாம் அமைதியாக அல்லது உற்சாகமாக உணர்கிறோமா என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்ப்படுகிறது. இந்த இயந்திரம் சுமார் 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது மனிதனை சுத்தப்படுத்த.