உயிர்பிழைத்த ஜனகராஜ்; முகத்தில் ஆபரேஷன் - பலபேரை சிரிக்க வைத்தவரின் பரிதாப நிலைமை?
தனது முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறித்து நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் பேசியுள்ளார்.
நடிகர் ஜனகராஜ்
ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் இணைந்து தனது நகைச்சுவையால் கலக்கியவர் நடிகர் ஜனகராஜ். தனக்கே உரிய பாணியில் பேசியும், சிரித்தும் மக்களை கவர்ந்தார்.
கடையிசியாக 96 என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருந்தார். அதன்பின் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனகராஜ் நடித்துள்ள 'தாத்தா' குறும்படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், அவர் உருக்குலைந்து போன தோற்றத்தில் இருந்ததை பார்த்த ரசிகர்கள், 'பலபேரை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த இவருக்கு என்ன ஆச்சு? என பரிதாபப்பட்டனர்.
இதனையடுத்து நேர்காணல் ஒன்றில் பேசிய ஜனகராஜ் "ஒரு படத்திற்காக வெளியூருக்கு ஷூட்டிங் போய் இருந்தோம். அப்போது யாரோ எங்கள் வாகனத்தை நோக்கி கல்லைவிட்டு அடித்தார்கள். அந்தக் கல் என் முகத்தைப் பதம் பார்த்துவிட்டது. அப்போது போனதுதான் என் முகத்தோற்றம்.
நீ தான் ஹீரோ
அந்த அடி கொடுத்த வலியை இன்றைக்கும் மறக்க முடியாது. அந்தளவுக்கு அவஸ்தைப் பட்டுவிட்டேன். உடனே மருத்துவமனையில் சேர்த்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நர்ஸ் வந்து "கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது" என்றார்.
எனக்கு சந்தேகம் வந்ததால் உடனே கண்ணாடியில் போய் பார்த்தால் ஒரு பக்கம் முகம் பூதாகரமாக வீங்கிப் போய் இருந்தது. இனிமேல் சினிமா வாழ்க்கையே காலி.. முடிந்துவிட்டது என்று நினைத்தேன். முகம் போய்விட்டது, பல் ஒரு பக்கம் பல் முழுக்க கொட்டி விட்டது. தாடை எலும்பு உடைந்துவிட்டது. அதையெல்லாம் அறுவை சிகிச்சையில் சரி செய்தார்கள். சில மாதங்கள் படுத்தப்படுக்கையாகவே கிடந்தேன்.
அப்போதுதான் பாரதிராஜா வந்து 'என் அடுத்த படத்தில் நீ தான் ஹீரோ. ராதாவுக்கு நீதான் ஜோடி' என்றார். எனக்கு நம்பிக்கையே இல்லை. முகம் முழுக்க கட்டு. திரும்ப நடிக்க முடியுமா? என்ற தயக்கம். அப்போதுதான் 'காதல் ஓவியம்' வாய்ப்பு வந்தது. என்ன மாதிரியான படம் அது. இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.