கனடா - இந்தியா மோதல்.. விதிவிலக்கே கிடையாது, குற்றவாளி நீதிக்கு முன் நிற்கவேண்டும் - அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்!

United States of America India Canada
By Vinothini Sep 23, 2023 05:59 AM GMT
Report

காலிஸ்தான் பிரிவினவாதி கொலை வழக்கில் இந்தியாவிற்கு விதிவிலக்கு எதுவும் கிடையாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இந்தியா - கனடா பிரிவினை

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இதனால் கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற உத்தரவிட்டார், இதற்கு எதிராக இந்தியா கனடா அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.

jake-sullivan-about-canada-india-clash

இதனால் இரு நாட்டிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவா நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில், "நிஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை பல வாரங்களுக்கு முன்னதாகவே பகிர்ந்து கொண்டோம்.

இந்தியாவுடன் இப்பிரச்சினையில் ஆக்கபூர்வமாக செயல்படவே விரும்புகிறோம். அவர்களும் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம். அப்போதுதான் இவ்விஷயத்தின் அடிஆழத்தை அறிய முடியும்" என்றார்.

அமெரிக்கா ஆலோசகர்

இந்நிலையில், இந்த மோதல் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசுகையில், "காலிஸ்தான் பிரிவினைவாதி பிரச்சினையில் சம்பந்தப்பட்டஇந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் சிறப்பு விலக்கு ஏதும் அளிக்கப்பட இயலாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

jake-sullivan-about-canada-india-clash

கனடாவின் குற்றச்சாட்டுகளை உற்று கவனிக்கிறோம். காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையில் நேரடியாக பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பைடன் பேசுவாரா என்பது தெரியாது. ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன" என்று கூறியுள்ளார்.