விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தானிகள் ஊடுருவிவிட்டார்கள் - மத்திய அரசு பகிரங்கம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.மத்திய அரசுடன் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. வேளாண் சட்டங்களை முழுமையாக பின்வாங்கியே ஆக வேண்டும் என விவசாயிகள் கோரி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களைப் பின்வாங்கப்போவதில்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இந்நிலையில் போராட்டம் தீவிரமடையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் ட்ராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனை எதிர்த்து வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ட்ராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு வாதிட்டது. வேளாண் சட்டங்களை செயல்படுத்த தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், சட்டங்களை ஆராய குழு ஒன்றை அமைக்க இருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஊடுருவிவிட்டார்கள் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளது.