அமைதித் தூதுவரான பிரதமர் மோடி.. எப்போது மணிப்பூருக்கு செல்வீர்கள் - சீண்டிய ஜெய்ராம் ரமேஷ்!
மணிப்பூருக்கு எப்போது மனிதாபிமான ரீதியிலான பயணத்தைப் பிரதமர் மோடி மேற்கொள்வார்? எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார் .
பிரதமர் மோடி
அரசு முறை பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி புருனே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா - புருனே நாடுகளுக்கு இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40ஆவது ஆண்டை ஒட்டி, அந்நாட்டு சுல்தான் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று புருனே செல்வதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் புருனே பயணத்தைத் தொடர்ந்து 2 நாட்கள் அரசு முறைப் பயணமாகப் பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள X தளப் பதிவில்,''புரூனே செல்வதை வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாகப் பார்க்கிறேன் .
இந்தியா-புருனே நட்புறவு ஏற்பட்டதன் 40ஆவது ஆண்டை நிறைவு செய்கின்றன. மாண்புமிகு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.மேலும் அவர்களுடன் இந்தியாவின் உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று பதிவிட்டு இருந்தார்.
ஜெய்ராம் ரமேஷ்
இந்த நிலையில் மணிப்பூருக்கு எப்போது மனிதாபிமான ரீதியிலான பயணத்தைப் பிரதமர் மோடி மேற்கொள்வார்? எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ,''மணிப்பூரில் வன்முறை அரங்கேறத்தொடங்கி இன்றுடன் சரியாக 16 மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் பதற்றமான நிலைமையே தொடருகிறது.
இந்த நிலையில்,
அமைதித் தூதுவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, உலகம் முழுவதும் செல்லும் பிரதமர் மணிப்பூர் மாநிலத்துக்கு, ஒருமுறைகூட செல்லவில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்காமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.