பாக். வீரருக்கு எதிராக 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்; உணர்வுகள் வெளிப்படலாம் - அண்ணாமலை பேச்சு!
பாக். வீரருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட விவகாரத்தில், சில நேரங்களில் உணர்வுகள் வெளிப்படலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
உதயநிதி கண்டனம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பும்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ரசிகர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான அணுகுமுறை ஏற்க முடியாது.
விளையாட்டு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டார்.
அண்ணாமலை கருத்து
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் "மைதானத்தில் ஏற்பட்ட கோஷம் குறித்தும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து குறித்தும்" கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை "விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் என்றால், தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும்.
அவர் (உதயநிதி) எதற்கு சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று கிளம்பினார். பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கு இந்தியா எப்போதும் அதிகபட்சமான மரியாதையையும், கௌரவத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் 13 ரன்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றபோது எழுந்து நின்று வரவேற்ற மண் இது. ஐதராபாத்தில் இரு முறை பாகிஸ்தான் விளையாடியுள்ளது. அந்த இரு முறையும் அர்ப்புதமான வரவேற்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.
நேற்று அகமதாபாத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவும், மரியாதையும் கொடுத்த நிறைய இந்தியர்கள் இருந்தார்கள். ஒரு பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும்போது 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷம் போட்டுள்ளனர். இது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக நான் பார்க்கவில்லை.
அவர்கள் ஒரு கோஷம் போடுகின்றனர் அவ்வளவுதான். பாகிஸ்தான் வீரர்கள் இந்திய விமானநிலையத்தில் வந்து இறங்கியதில் இருந்து மிகப் பெரிய வரவேற்பை கொடுத்துவருகிறோம். நம்மை பொறுத்தவரை விளையாட்டை விளையாட்டாகத் தான் பார்க்கிறோம். சில நேரங்களில் உணர்வுகள் வெளிப்படலாம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.