மருமகள் குடும்பத்தையே பிரிச்சிட்டா.. பேத்தியை பார்த்து 5 வருஷமாச்சு - குமுறும் ஜடேஜாவின் தந்தை!
இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங், மருமகள் ரிவாபா தங்களது குடும்பத்தை பிரித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
குற்றச்சாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2017-ம் ஆண்டு ரிவாபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ரிவாபா குஜராத்தின் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக சார்பில் வென்று எம்.எல்.ஏ வாக இருக்கிறார்.
இந்நிலையில் ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங், மருமகள் ரிவாபா தங்களது குடும்பத்தை பிரித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசியிருக்கும் அவர் "நாங்கள் ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபாவுடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
இருவருக்கும் திருமணம் முடிந்து 2-3 மாதத்திலிருந்தே இதே நிலைதான். ஜடேஜா தனியாக ஒரு பங்களாவில் வசிக்கிறார். ஒரே ஊரிலிருந்தும் நாங்கள் இருவரும் பார்த்துக் கொள்வதில்லை. அவருடைய மனைவி ஜடேஜாவை என்ன செய்தார் என்று தெரியவில்லை.
மறுப்பு
அவருக்குத் திருமணமே செய்து வைத்திருக்கக்கூடாது. அவர் கிரிக்கெட்டர் ஆகாமலேயே இருந்திருக்கலாம். கல்யாணம் முடிந்த மூன்று மாதத்திலேயே ரிவாபா எல்லாவற்றையும் அவர் பெயருக்கே எழுதி வாங்கிக் கொண்டார்.
குடும்பத்தில் சச்சரவுகளை உருவாக்கிவிட்டார். குடும்பமாக இருப்பதை விட தனியாக இருப்பதைத்தான் அவர் விரும்பினார். வெறுமென வெறுப்பு மட்டுமே அவரிடம் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய பேத்தியை கூட நான் நேரில் பார்க்கவில்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தந்தையின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜடேஜா, அந்தப் பேட்டியில் குறிப்பிடப்படும் எதுவும் உண்மையல்ல என்றும், என்னுடைய மனைவியின் மீதான இமேஜை பாழாக்கச் செய்யப்படும் இந்த செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.