வெறும் 7 ரன்களில் மொத்த டீமும் ஆல் அவுட் - கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை
ஐவரி கோஸ்ட் அணி T20 போட்டியில் 7 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.
T20 கிரிக்கெட்
ஐசிசியின் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்பிரிக்க துணை கண்ட தகுதிச் சுற்று போட்டிகள் நைஜீரியாவில் நடைபெற்று வருகின்றன.
லாகோஸ் நகரில் நடந்த லீக் போட்டியில் நைஜீரியா, ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற நைஜீரிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
7 ரன்கள்
நைஜீரியா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய செலிம் 53 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். ஐசாக் ஓக்பே 23 பந்துகளில் 65 ரன்களைக் குவித்தார்.
272 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஐவரி கோஸ்ட் அணி வீரர்கள் அனைவரும் வரிசையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 7.3 ஓவர்கள் முடிவில் 7 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஊட்டாரா முகமது 4 ரன்கள் அடித்தார். 3 வீரர்கள் தலா ஒரு ரன் அடித்தனர். மீதமுள்ள 7 வீரர்கள் டக் அவுட்டாகினர்.
இதனால் நைஜீரியா அணி 264 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச T20 கிரிக்கெட்டில் மிக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை ஐவரி கோஸ்ட் அணி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் மங்கோலியா (2024) மற்றும் ஐல் ஆஃப் மேன் (2023) அணிகள் 10 ரன்களை எடுத்திருந்ததே குறைவான ரன்களாக இருந்தது.