13 வயது சிறுவனை கோடிகளில் வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் - யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் ஏலம்
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இரு நாட்களாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது.
முதல் நாள் ஏலத்தில் 10 அணிகளும் இணைந்து 72 வீரர்களை 467.95 கோடி ரூபாய்க்கு வாங்கினர். அதிகபட்சமாக ரிஷப் பன்டை, லக்னோ அணி 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
வைபவ் சூர்யவன்ஷி
2ஆம் நாள் ஏலத்தில் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் ஏலத்திற்கு வந்த வீரராக, 13 வயது வைபவ் சூர்யவன்ஷி பதிவுசெய்யப்பட்டார். ஆனால் இவரை வாங்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி போட்டன.
இளம் வயதில் சதம்
ரூ.30 லட்சம் அடிப்படை விலையாக இருந்த வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. பிஹாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி வெறும் 12 வயது 284 நாட்களில், 2023-24-ல் நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் மிகச்சிறிய வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் தொடரில் அவர் 58 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இந்திய அளவில் மிக இளம் வயதில் சர்வதேச போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது இள வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் குவித்துள்ளார்.