அன்னபூர்ணா விவகாரம்..வெட்கப்பட வேண்டிய ஒன்று - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஒன்றிய அமைச்சரின் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று என ஹோட்டல் அன்னபூர்ணா விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்காக முதலீடுகளை ஈர்க்க அரசுமுறைப் பயணமாக 17 நாள் அமெரிக்கா சென்றார். பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார் அப்போது அவருக்கு வழி நெடுக திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அமெரிக்க நாட்டிற்குச் சென்று அரசு முறைப் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். இது வெற்றிகரமான பயணமாகவும், இன்னும் சொல்லப்போனால் ஒரு சாதனைக்குரிய பயணமாகவும் அமைந்திருந்தது.
அன்னபூர்ணா விவகாரம்
தனிப்பட்ட எனக்கு அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு சாதனைப் பயணமாக இந்தப் பயணம் அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது கோவையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி தொடர்பான குறைகேட்பு கூட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு கடினமாக இருக்கும் என்று பேசிய அன்னபூரணாவின் உரிமையாளரை, அடுத்த நாள் அழைத்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “ஜிஎஸ்டி குறித்த தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை அன்னபூர்ணா சீனிவாசன் முன் வைத்தார் என்பதற்காக அதனை ஒன்றிய அமைச்சர் கையாண்டவிதம் என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்று. அதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார்.